இளைஞர்களும், உடற்பயிற்சியும்

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங் களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது.
இளைஞர்களும், உடற்பயிற்சியும்
Published on

நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம் காலை உடற்பயிற்சி. சிலருக்கு காலை தூக்கத்துக்கும் உடற்பயிற்சி ஆர்வத்துக்கும் நடக்கும் போரில் பெரும்பாலும் காலை தூக்கமே வெற்றிபெறுகிறது. இதனால், பல நாட்கள் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர்.காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளை செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்த தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் (norepinephrine) எண்டார்பின் (Endorphin), டோபமைன் (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி, வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை யடைந்து தோல் சுருக்கம் விழுவதை தாமதப்படுத்துகிறது. வயதாகும்போது செல்களின் செயல்திறன் குறைந்து, அவை இரண்டாக பிரியத்தொடங்குகின்றன. இதன் விளைவாக, தோல் செல்களின் மையப் பகுதியான நியூக்ளியஸில் உள்ள குரோமோசோம்களின் அளவு சிறிதாகும். இதனால், தோலில் சுருக்கம் விழும். பல வருடங்கள் உடற்பயிற்சி செய்வதால், இந்த குரோமோசோம்களின் நீளம் குறையத் தாமதமாகிறது என்பதும், இதனால் தோலில் சுருக்கம் விழுவதும் தள்ளிப் போடப்படுகிறது என்பதும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று

தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் (blood vessel) உருவாகும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்த அளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்ய தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது.

எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

தீவிர நோய்களுக்கு உள்ளானவர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்டநாட்களாக இருந்து வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்; இதன் மூலமாக நோயின் தாக்கம் குறையும் எனபது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com