

மதுரை,
மதுரை ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் அருண் (28). இவருக்கும், செல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருண் ஆட்டோ ஓட்டி வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, வேலைக்குச் செல்லாமல் அவா் வீட்டில் இருந்தாா். இவரது மனைவி பிரியா சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு குழந்தை இல்லை.
குடும்ப சூழல், தன்னுடைய மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களால் அருண் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே தான் தற்கொலை செய்து கொள்வதாக மனைவியிடம் புலம்பியுள்ளார். கணவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்ட பிரியா, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
பின்னர் இருவரும் சாஸ்திரி தெருவில் உள்ள வீட்டில் புதன்கிழமை அன்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன்-மனைவி இருவரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் அவர்களது அறையில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் "எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள். எங்களுடைய இறப்பை காரணம் காட்டி கோவில் திருவிழாவை நிறுத்தி விட வேண்டாம்" என அதில் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த இளம் தம்பதி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.