

தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்தையாபுரம் சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வின் பிரபு (வயது 37). இவர் தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ் சரகத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமண வரன் பார்த்தது தொடர்பாக வந்த புகாரின்பேரில், செல்வின் பிரபு விசாரணை நடத்தினார்.
இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தருவைகுளம் போலீசார், ஏட்டு செல்வின் பிரபு மீது வீட்டுக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு செல்வின் பிரபுவை பணி இடைநீக்கம் செய்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.