பழங்களின் விலையும் கிடுகிடு உயர்வு

கடலூரில் காய்கறிகளை தொடர்ந்து பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழங்களின் விலையும் கிடுகிடு உயர்வு
Published on

கிடுகிடு உயர்வு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் கடலூர் முதுநகரில் ஏராளமான பழக்கடைகள் உள்ளன. இங்கு மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரத்தில் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்டவையும், மளிகை பொருட்களின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதில் தக்காளி, பச்சைமிளகாய், பீன்ஸ் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வையே தாங்கிக்கொள்ள முடியாத மக்களுக்கு தற்போது மற்றொரு பேரிடியாக பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240

அதாவது கடந்த வாரம் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஆப்பிள் நேற்று ரூ.240-க்கும், ரூ.140-க்கு விற்பனையான மாதுளம் பழம் ரூ.200-க்கும், ஆரஞ்சு பழம் ரூ.100-ல் இருந்து ரூ.140 ஆகவும், சாத்துக்குடி ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது. அதேபோல் ரூ.50-க்கு விற்கப்பட்ட செவ்வாழை ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் திராட்சை ஒரு கிலோ ரூ.100, மாம்பழம் ரூ.50, சப்போட்டா ரூ.60, கொய்யாப்பழம் ரூ.40-க்கு என விலை மாற்றமின்றி கடந்த வாரம் விற்பனையான விலைக்கே நேற்றும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் கிலோ கணக்கில் வாங்கி வந்த பொதுமக்கள் தற்போது பழங்களை கிலோ, கிலோ என எடை குறைவாக வாங்கிச் செல்வதை காண முடிகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து பழக்கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், உள்ளூர் பழங்களான கொய்யா, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், செவ்வாழை உள்ளிட்ட பழங்களின் வரத்து சீராக உள்ளது. இதனால் அந்த பழங்களின் விலை உயரவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த பழங்களின் விலை உயர வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தான் அவற்றின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவை இறக்குமதி செய்யாவிட்டால், விலை அதிகரிக்க கூடும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com