

மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரேணுகோபால். இவர் மந்தாரக்குப்பத்தில் இனிப்பகம் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி காமாட்சியுடன்(வயது 48) நேற்று முன்தினம் காலை சென்னை சென்றார். பின்னர் இரவு சென்னையில் இருந்து ரெயிலில் ஏறி, விருத்தாசலம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பஸ்சில் மந்தாரக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இரவு 11 மணியளவில் வந்து இறங்கினர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் திடீரென காமாட்சியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். ரேணுகோபால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.