

மயானம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியில் அய்யர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பல்வேறு வகுப்பினை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அய்யர்பாளையம் குறவன்வாரி ஆறு அருகே மயானம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் யாரேனும் இறந்தால் குறவன்வாரி ஆற்றைக்கடந்து அருகிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். வெயில் காலத்தில் யாரேனும் இறந்தால் எளிதாக ஆற்றை கடந்து அடக்கம் செய்து விடுகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் யாராவது இறந்தால் குறவன்வாரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றைக்கடந்து சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆசைதம்பி கூறுகையில், எங்கள் கிராமத்தில் யாரேனும் மழைக்காலத்தில் இறந்தால் ஆற்றைக் கடந்து சென்று அடக்கம் செய்ய முடியாமல் பல கிலோ மீட்டர் கடந்து சென்று வெளியூரில் சடலத்தைக் அடக்கம் செய்யும் சூழ்நிலை உள்ளது. மழை காலங்களில் பலமுறை எங்கள் ஊரில் அடக்கம் செய்ய முடியாமல் பக்கத்து ஊரான அரும்பாவூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு பண விரயமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு அய்யர்பாளையம் கிராம பொதுமக்களின் நலன் கருதி உரிய தீர்வு காண வேண்டும் என கூறினார்.
அலையவிடும் அவலநிலை
அய்யர்பாளையத்தை சேர்ந்த செல்வாம்பாள் கூறுகையில், பொதுமக்கள் வாழும்போது தான் நிம்மதி இல்லாமல், சொந்த ஊரில் சம்பாதிக்க முடியாமல் வெளியூருக்கு சென்று வேலை செய்து பணம் ஈட்டுகின்றனர். இறந்த பிறகாவது சொந்த ஊரில் அடக்கம் செய்து ஆன்மா சாந்தியடைய விடாமல் வெளியூரில் அடக்கம் செய்து ஆன்மாவை அலையவிடும் அவலநிலை உள்ளது. எனவே சுடுகாடு பாதையை சீரமைத்து, குறவன்வாரி ஆற்றை எளிதாக கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைத்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.