

ராசிபுரம்:-
ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ராசிபுரம் ஏரி, தட்டான் குட்டை ஏரி, அணைப்பாளையம் ஏரிகளில் நீர் நிறைந்து வருகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சந்திரசேகரபுரம் கிராம பகுதியில் செல்லும் சேலம் கரூர் அகல ரெயில் பாதையில் மழை தண்ணீர் புகுந்து தேங்கி நின்றது. தேங்கி நிற்கிற தண்ணீரை ரெயில்வே துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பான முறையில் ரெயில்கள் சென்று வருவதற்காக பொதுப்பணி துறையினர் மற்றும் ரெயில்வே துறையினர் ரெயில்வே போலீசாருடன் நேற்று சந்திரசேகரபுரம் பகுதியில் செல்லும் ரெயில்வே பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்திருந்த நீர்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ஏரியின் மதகுகளை திறந்து விடக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.