

காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமை மாநிலம் முழுவதும் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இவ்வாறான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு பயனடையும் வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் நடப்பாண்டின் 2-வது வேலைவாய்ப்பு முகாம் ஆகும். இனி வரும் நாட்களில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயனடையும் வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற இந்த முகாமில் 2 ஆயிரத்து 634 பேர் கலந்துகொண்ட நிலையில் 342 பேர் தேர்வு செய்யப்பட்டுபணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 255 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். முகாமில் தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, மதுரை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் ராஜலெட்சுமி, மணிகணேஷ், அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக்கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகமை உறுப்பினர்கள் வேலாயுதராஜா மற்றும் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.