என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை- எடப்பாடி பழனிசாமி

பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை- எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இப்தார் நோன்பு விழாவின் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் பயணம் செய்யும் நான், அவர்களை போல இஸ்லாமியர்களுக்கு உற்ற நண்பனாக சகோதரனாக பாதுகாவலனாக இருப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன். பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல.

பேரறிஞர் அண்ணா கூறிய படி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது. சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன். எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமாற நினைப்பவன் நான். அந்த வகையில் உங்களுக்கு எப்போதும் உற்ற தோழனாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். "என்னை நம்பாமல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள், நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com