லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
Published on

புதுச்சேரி நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எம்.புதூர் பகுதியில் வாகனங்களை மறித்து மர்மகும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த சூழலில், புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறைக்குச் சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு மர்மநபர்கள்  தப்பியோடியுள்ளனர்.. இதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் (எ) முட்டை விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற விஜய் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது விஜய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் என்கவுண்ட்டர் செய்த பிரபல ரவுடி விஜய் மீது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உட்பட 30 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதான 5 பேரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

இதனிடையே கொள்ளையன் விஜய், தங்களை தாக்க முயன்றதால் என்கவுண்ட்டர் செய்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com