

செய்யாற்றில் வெள்ளம்
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்டு கடந்த 4 நாட்களுக்கு மேலாக காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் நிலைகளில் நீரானது நிரம்பி வழிந்து செல்கின்றன. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் காஞ்சீபுரம் அருகே மாகரல் மற்றும் வெங்கசேரி இடையே செல்லும் செய்யாற்றில் தடுப்பணையை தாண்டி 3500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கின்றன.
கனரக வாகனங்கள் செல்ல தடை
புதிய பாலம் அமைக்கப்பட்டு வருவதால் அமைக்கப்பட்ட தற்காலிகமாக பாலத்தின் அடியில் வெள்ள நீர் வேகமாக செல்வதால், காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்ல மாகரல் வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்யாற்றில் மேலும் நீர் வரத்து அதிகரித்தால் இந்த தரைப்பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, தரைப்பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்வதற்கு வழி முற்றிலுமாக துண்டிக்கப்படும்.