

ஆவடி
கேட்டரிங் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி பணமோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் வேலவன் (வயது 35). இவரது நண்பர்களான கண்ணன், மதன், ஜனனி, பிரபாகரன், செல்வராஜ் ஆகியோரிடம், அம்பத்தூரை சேர்ந்த உப்பிலி சீனிவாசன் (34) என்பவர், தான் குடியிருக்கும் வீட்டின் ஒரு அறையில் கேட்டரிங் தொழில் நடத்தி வருவதாகவும். பல நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்து வருவதாகவும் கூறினார். மேலும், தனது தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய வேலவன் மற்றும் அவரது நண்பர்கள் உப்பிலி சீனிவாசனிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் வரை கொடுத்தனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட உப்பிலி சீனிவாசன் சொன்னபடி செய்யாமல் மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட உப்பிலி சீனிவாசனை நேற்று கைது செய்தனர்.