

சென்னை,
தமிழக அரசு உத்தரவின்படி, சென்னை குடிநீர் வாரியம் மாநகர குடிநீர் தேவைக் காக புதிய நீர் ஆதாரங்களை கண்டறிய சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளது. இந்த குழுவினர், சென்னை சுற்றுவட்டார ஏரிகள் மற்றும் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் இருந்து நீரை எடுத்து பரிசோதித்து, செயல்திட்டங்களை உருவாக்க உள்ளது. குறிப்பாக மாதவரம், ரெட்டேரி ஏரியில் ஆய்வு செய்து ஏரியின் அருகில் நவீன தொழில் நுட்பத்திலான நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
மற்ற ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் குறித்து அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஆய்வின் நோக்கம், திட்டம், ஆய்வை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை வரையறுக்க சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே, செயல் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழுவை உருவாக்கியுள்ளது. இந்த குழு, பொதுப்பணித்துறையுடனும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களுடனும் இணைந்து திட்டம் வகுக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
சுத்திகரிப்பு நிலையம்
தற்போது சென்னை குடிநீர் வாரியம் முதற்கட்டமாக உடனடியாக மாநகர பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்காக ஏரிகள் மற்றும் நீர் ஆதாரங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள கொள்ளளவு மற்றும் நீரின் தரம், ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், நீர் மாசுக்கட்டுபாடு, நீர் வழங்கும் கொள்திறன் மற்றும் கூடுதல் ஏற்பாடுகள், தற்போதைய பிற தேவைகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதா? என அறிதல், தற்போது உள்ள சுத்திகரிப்பு முறைகள் மற்றும் நீர்கொண்டு வரும் வசதிகள், நீர் ஆதாரத்தின் அருகில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நிலங்கள் குறித்து சிறப்பு குழு பரிசீலித்து வருகிறது.
ஏரி, கல்குவாரிகள் ஆய்வு
நேரடியாக பார்வையிடுதல், பரிமாற்றத்திற்கான குழாய்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களைப் பார்வையிடுதல், களத்தில் விசாரித்தல் மற்றும் பொதுப்பணித்துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் ஆய்வு மையம் போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை செய்தல் போன்றவற்றின் மூலம் வளங்கள் கண்டறியப்பட்டன.
தற்போது போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம், அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அய்யப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய ஏரிகள் மற்றும் சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
புதிய சுத்திகரிப்பு நிலையம்
போரூர் மற்றும் சிக்கராயபுரம் குவாரி பணி நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்த உதவும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. சென்னை குடிநீர் வாரியம், கிங் ஆய்வு மையம் மற்றும் ஐ.ஐ.டி. மூலமாக ரெட்டேரியின் மொத்த கொள்ளளவு, நிலத்தடி மண், நீரின் தரம், வடிகால்கள் மற்றும் கழிவுநீர் வடிகால்கள், சுத்திகரிப்பு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரெட்டேரி நீரை சுத்திகரித்து நுண்ணுயிர் நீக்கம் செய்து பயன்படுத்தலாம் என ஆய்வு மற்றும் பலகட்ட பரிசோதனைகளின் முடிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தினசரி 1 கோடி லிட்டர் கொள்ளளவில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரியில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஆய்வை அடுத்து இதர ஏரிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.