திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் நோக்கில் மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாப்பாக்குடி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சொரிமுத்துராஜ் (வயது 30) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சொரிமுத்துராஜை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN" எனது செயலியை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் இந்த App-ஐ ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைத்தால், தயங்காமல் தைரியமாக புகார் அளித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com