நகை கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் மெயின் பஜார் பகுதியில் நகை கடையை இரவில் பூட்டிவிட்டு சென்று, காலையில் கடையை திறந்தபோது, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு கடையினர் அதிர்ச்சியடைந்தனர்.
நகை கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் புதுமனை தெருவைச் சேர்ந்த அலியார் மற்றும் அவரது மகன் முகமது அசனார் ஆகியோர் வீரவநல்லூர் மெயின் பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறந்தபோது, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடையின் பின்புறச் சுவரில் பெரிய துளையிடப்பட்டு அதன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சேரன்மாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடையிலிருந்த 1 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் நகைக் கடை உரிமையாளரிடம் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு துணிகர கொள்ளை நடந்திருப்பது வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் வீரவநல்லூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் பகுதியில் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com