தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாநில சட்டப்பணி ஆணைக்குழு நடத்தியது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு
Published on

சென்னை,

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவில் லோக் அதாலத்(தேசிய மக்கள் நீதிமன்றம்) என்ற மக்கள் நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடத்தப்படுகிறது. அந்த வகையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில், மாநில சட்டப்பணி ஆணைக்குழு இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்தியது.

இதுகுறித்து சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

“தமிழ்நாட்டில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதலின்படி, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மேற்பார்வையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி பி.பி.பாலாஜி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஏ.ராமமூர்த்தி, ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 7 அமர்வுகள், மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் என்று மொத்தம் 516 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

இந்த அமர்வுகள், நீதிமன்றத்தில் நிலுவையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக்மோசடி வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின்சார வாரியம் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள் என்று பல வகையான வழக்குகளை விசாரித்தது.

இதில், இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் முழு சம்மதத்துடன், 1 லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகள் சமரசத்துக்கு வந்தது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 34 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 325 ரூபாய் கிடைத்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா வழங்கினார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com