

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதர்கூடம் கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் அம்மனுக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். கோவில் பூசாரி, நேற்று முன்தினம் அம்மனுக்கு பூஜைகள் முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுவிட்டார்.
கோவில் பூசா, மறுநாள் கோவிலை திறப்பதற்காக வநதபோது கோவிலின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்தார். உடனடியாக, அவர்கள் திருக்கழுக்குன்றம் போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அம்மன் தலையிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புடைய வெள்ளிக்கிரீடம், கோவில் உண்டியலில் இருந்த சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
மிகவும் பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை திருக்கழுக்குன்றம் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.