

நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்து உள்ளார்.
அப்போது அவரது 1 வயது குழந்தை காருக்குள் இருந்து உள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்க கடுமையாக போராடினார். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்ததுடன். பல்வேறு வழிகளில் காரை திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரின் கதவில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த 1 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கிய சம்பவத்தால் நெல்லை வண்ணார் பேட்டை பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.