வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 10 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு

சிதம்பரம் அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட 10 பழங்கால சாமி சிலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 10 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூரை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார்.

இதற்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் கடப்பாறையால் பள்ளம் தோண்டியபோது, ஏதோ ஒரு பொருள் மீது கடப்பாறை கம்பி குத்தியபோது வித்தியாசமான சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளி வள்ளல், இதுபற்றி உத்திராபதியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் இருள் சூழ்ந்ததால், தொழிலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர்.

தொழிலாளர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் வள்ளல் மற்றும் தொழிலாளர்கள் நேற்று காலை மீண்டும் பள்ளம் தோண்டுவதற்காக அங்கு வந்தனர். அப்போது, அங்கு மர்ம நபர்கள் பள்ளம் தோண்டி அதில் இருந்த பொருளை எடுத்து சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு உத்திராபதியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

உலோக சிலைகள் மீட்பு

அப்போது அவர்கள், வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய இடத்தில் இருந்து அமர்ந்த கோலத்தில் சிவன், பார்வதி சிலை, நின்ற கோலத்தில் யோகசக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன், ஆடிப்பூர அம்மன், இடம்புரி விநாயகர் ஆகிய 6 உலோக சிலைகள் இருந்ததாகவும், அதை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளதாகவும் கூறிய உத்திராபதியின் குடும்பத்தினர் அந்த சிலைகளை அதிகாரிகளிடமும் காண்பித்தனர்.

இதனிடையே தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து உத்திராபதியின் குடும்பத்தினரிடம் இருந்த 6 சிலைகளையும் மீட்டனர்.

13-ம் நூற்றாண்டை சேர்ந்தது

மேலும் பள்ளம் தோண்டிய இடத்தில் வேறு ஏதேனும் சிலைகள் இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து பள்ளம் தோண்டினர். அதில் நடராஜர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர், திரிபுரநாதர்(சிவன்) ஆகிய 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 1 அடி முதல் 3 அடி உயரம் உள்ள இந்த சிலைகள் அனைத்தும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த உலோக சிலைகள் என்று கூறப்படுகிறது.

பின்னர் இந்த சிலைகள் அனைத்தையும் போலீசார் எடுத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அந்த சிலைகள் தாசில்தாரிடம் ஒப்படைக்க இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் அங்கு வேறு ஏதேனும் சிலைகள் இருக்கலாம் என சந்தேகிப்பதால் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் இரும்பு வேலியால் தடுப்புகள் அமைத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாமி சிலைகள் கிடைத்த தகவல் அறிந்து திருநாரையூர் பகுதியை சேர்ந்த மக்கள் அங்கே திரண்டு வந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை வியப்புடன் பார்த்தனர்.

மேலும் தொல்லியல் துறையினரும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com