10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
Published on

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம், நேதாஜி தெருவைச் சேர்ந்த சீதாலட்சுமி (வயது 70) என்பவரிடம் 2 பவுன் சங்கிலியும், கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா (49) என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியையும் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், சங்கிலி பறிப்பு கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களிடமும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (27) என்பதும், தற்போது சென்னையை அடுத்த மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின:-

சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்த அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகை மற்றும் பலரிடம் கடன் வாங்கியது என சுமார் 15 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்து கடனாளியான அருணாச்சலம், சரியான வேலை இல்லாததால் கடனை திருப்பி செலுத்த பணம் இல்லாமல் தவித்தார். இதனால் 'யூடியூப்பில்' பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படியே தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடமும் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது.

அதில் 5 பவுன் நகையை தங்கையின் திருமணத்துக்காக வீட்டில் கொடுத்துள்ளார். மீதமுள்ள 2 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றதும், வருகிற 10-ந் தேதி அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான அருணாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com