பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - திருமாவளவன் அறிவிப்பு


பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - திருமாவளவன் அறிவிப்பு
x

கோப்புப்படம்

பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதற்கிடையே தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே புயல் பாதித்த மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் வி.சி.க. சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து லட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதல்-அமைச்சரிடம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story