

மேல்மலையனூர்
விவசாயிகள்
மேல்மலையனூர் அருகே சாத்தாம்பாடி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை என்கிற வேணுகோபால்(45). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.
பின்னர் நேற்று காலையில் எழுந்து வீட்டின் தரைத்தளத்தில் வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வேணுகோபால் வீட்டின் அறைக்குள் சென்று பாத்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
ரூ.10 லட்சம் மதிப்பு
இதேபோல் அதே பகுதி விநாயகர்கோவில் தெருவை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(48) வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(50), கோவிந்தராஜி(80) ஆகியோரின் வீடுகளிலும் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வளத்தி போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர் தட்சிணாமூர்த்தி கொள்ளை நடந்த வீடுகளில் உள்ள பீரோ, ஜன்னல், கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்து தடயங்களையும் சேகரித்தார்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து வளத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த அன்று அந்த பகுதியில் சந்தேக நபர்கள் யாரேனும் வந்து சென்றார்களா? என்பது குறித்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
அடுத்தடுத்து 2 விவசாயிகளின் வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சாத்தாம்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.