

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியவில்சன் பேரவையில் தாக்கல் செய்கிறார். மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை அத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஶ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி , ரஞ்சித் குமார், மதன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதைபோல விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், கைத்தறித்துறையினர், வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத், இதுவரை நான்கு மண்டல அளவிலான கூட்டம் நடத்தி உள்ளோம். சென்னையை தவிர மற்ற மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு முதல்-அமைச்சரிடம் வழங்கியுள்ளோம். விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் நிதிநிலையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.
விவசாயிகள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசிலிக்கப்படும். குளிர் சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது விவசாயிகளின் வாழ்வதாரமும் உயர வேண்டும். பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.