

சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வியட்நாமில் சுற்றுலா பயணத்தின்போது நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வியட்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படும், லாவா மொபைல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா?, வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டனவா?, உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா?, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனரா? மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதோ அல்லது அலட்சியம் நடந்ததோ உறுதியானால், லாவா மொபைல் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், உயிரிழந்த முருகபிரபு உள்ளிட்ட 10 பேர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அனைத்து அரசு உதவிகளும் விரைவாக வழங்கப்பட வேண்டும். பத்து தமிழரின் உயிரிழப்பு வெறும் விபத்து என்ற பெயரில் மறைக்கப்படக்கூடாது. உண்மையை வெளிக்கொண்டு வந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதைத் தமிழக அரசும், மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.