சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது - பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது - பொதுமக்கள் கடும் பாதிப்பு
Published on

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் நியூ காலனி, பாரத் நகர், சக்தி நகர், நிலமங்கை நகர், சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை மழைநீர் சூழந்தது.

வேளச்சேரி ஆண்டாள் நகர், ஏ.ஜெ.எஸ்.காலனி, நேதாஜி காலனி போன்ற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக வீடுகளில் சுற்றி மழைநீர் தேங்கி இருந்தது. கிண்டி நரசிங்கபுரம், மசூதி காலனி, புதுத்தெரு, வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி இருந்தது. இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சுற்றி இருந்தது.

பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜல்லடியன்பேட்டை ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் ஏரியின் மதகில் மணல் மூட்டைகள் போட்டுவிட்டதால் உபரி நீர் வெளியேறாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் முறையிட்டதன் பேரில், முன்னால் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் அப்பகுதி மக்களுடன் சென்று ஏரியின் மதகில் இருந்த மணல் மூட்டைகளை அகற்றி உபரி நீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார்.

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்று கரையோரம் உள்ள பர்மா காலனியில் வசித்த 25 குடும்பங்களை அங்கிருந்து அதிகாரிகள் அருகில் உள்ள முகாமில் தங்கவைத்தனர். மேடவாக்கம் பாபு நகரில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். புழுதிவாக்கம் ராம் நகர், மடிப்பாக்கம் சதாசிவம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com