

ராமேசுவரம்,
கேரள கடல் பகுதியில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளியேறிய ரசாயன பொருட்கள் தனுஷ்கோடி கடற்கரையில் 10 டன் அளவில் சேகரிக்கப்பட்டு உள்ளன.
கேரள மாநிலம் கொச்சினில் இருந்து ஏராளமான கண்டெய்னர்களுடன் வெளிநாட்டுக்கு புறப்பட்ட கப்பல் ஒன்று கடந்த ஆண்டு மே மாதம் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. இந்த கப்பலில் இருந்து சில கண்டெய்னர் திறந்து அதிலிருந்து பல பொருட்கள் பல்வேறு இடங்களில் கரைஒதுங்கியது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான ரசாயன பொருட்கள் கடந்தாண்டு தனுஷ்கோடி கடற்கரையில் பல இடங்களில் பரவலாக கரை ஒதுங்கியது. அதை தொடர்ந்து கப்பல் நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர்கள் மூலம் இந்த ரசாயன பொருட்களை சேகரித்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடலில் விழுந்த பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் கடல் நீரோட்டம், சீற்றம் காரணமாக தற்போது வரை தொடர்ந்து தனுஷ் கோடி எம்.ஆர்.சத்திரம் முதல் கம்பிப்பாடு அரிச்சல்முனை கடற்கரை வரை ஆங்காங்கே கரை ஒதுங்கி வருகிறது.
இவ்வாறு கரை ஒதுங்கி கிடக்கும் வெள்ளை நிறத்தில் பாசிகுண்டுகளை போல் காட்சியளிக்கும் ரசாயன பொருட்களை சேகரிக்கும் பணியில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையில் கரைஒதுங்கி கிடக்கும் மூலப்பொருட்களை கடற்கரை மணலோடு அள்ளி சல்லடை மூலம் ரசாயன பொருட்களை தனியாக பிரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓராண்டுகளுக்கு மேலாக தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கும் இந்த பொருட்கள் தற்போது வரை சுமார் 10 டன்னுக்கு மேல் சேகரித்துள்ளதாக கூறப் படுகிறது. ஆனால் இன்னும் இந்த ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரசாயன பொருட்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளிலும் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.