விழுப்புரம் அருகே சிலிண்டர் வெடித்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

சரண்யா சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
விழுப்புரம் அருகே சிலிண்டர் வெடித்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு.
பத்ரிநாத்
Published on: 

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் இன்று காலை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்தில் சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சமைக்கும் போது நேர்ந்த விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு பத்ரிநாத் (வயது 10) என்ற மகன் உண்டு. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சரண்யா வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இடிந்து தரைமட்டமான வீடு

சிலிண்டர் வெடித்ததன் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பத்ரிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த பயங்கரமான சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் சரண்யாவை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்புப் பணிகள் -விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் இடிந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X