சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு,
சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 29). கூலி தொழிலாளியான இவர் கடந்த 08.04.2015 அன்று 9 வயது சிறுமியிடம் கை, கால்களை கட்டிக்கொண்டு விளையாடலாம் என கூறி அந்த சிறுமியின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு பலவந்தமாக பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயாரிடம் கதறி அழுதப்படி கூறியுள்ளார். உடனே அந்த சிறுமியின் தாய் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி நசிமா பானு நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் முனியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி வாதாடினார்.






