

தூத்துக்குடி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டு புதிதாக சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவி பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி தூத்துக்குடி, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 58 புதிய சிசிடிவி கேமராக்களும், ஊரக உட்கோட்டத்தில் 114, திருச்செந்தூரில் 52, சாத்தான்குளத்தில் 29, ஸ்ரீவைகுண்டத்தில் 59, மணியாச்சியில் 24, கோவில்பட்டியில் 73, மற்றும் விளாத்திகுளத்தில் 51 என அனைத்து உட்கோட்டங்களிலும் மொத்தம் 460 புதிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்டன.
அதன்படி திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரிகுடியிருப்பு பகுதிகளில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து புதிதாக நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட எஸ்.பி. மதன் துவக்கி வைத்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உள்பட காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் மற்றும் தேரிகுடியிருப்பு ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.