100 சதவீத வாக்குப்பதிவு: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
100 சதவீத வாக்குப்பதிவு: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், தலைமையில் இன்று (25.03.2026) சென்னை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 12,505 மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், மாற்றுத்திறனாளிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் செல்வதற்கு ஏதுவான உள் மற்றும் வெளியேறும் வழிகள், சாய்வுதளம் மற்றும் கைப்பிடிகள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கென பிரத்யேக வாகன நிறுத்துமிடம் அமைத்தல், சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற நடைபாதை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாக்காளர் உதவி மையம், முதலுதவிப் பெட்டி, ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்படுத்துதல், குடிநீர், கழிவறை, வாக்குச்சாவடி நுழைவுவாயிலில் எளிதில் அணுகக் கூடிய வழிகாட்டுதல்கள் மற்றும் அடையாளப் பலகைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் அமைத்திட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இத்தேர்தலில் 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண். 1800 425 7012 என்ற தொலைபேசி எண், மாநகராட்சியின் சேவை எண் 1913 மற்றும் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) நா. பூஷ்ணாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் சரவணக் குமார் (வடசென்னை மாவட்டம்), சீனிவாசன் (தென்சென்னை மாவட்டம்), மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமிதா சதாசிவம், மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com