தோகைமலை முருகன் கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மூலவர் சிலை மீண்டும் பிரதிஷ்டை

பாலதண்டாயுதபாணி சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
தோகைமலை முருகன் கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மூலவர் சிலை மீண்டும் பிரதிஷ்டை
Published on: 

தோகைமலை,

தோகைமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மூலவர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பழமையான சிலை

கரூர் மாவட்டம், தோகைமலை, மலை மீது அமைந்துள்ள இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பழமையான மூலவர் சிலையை மாற்றிவிட்டு, புதிய கற்சிலை நிறுவப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலதண்டாயுதபாணி

பின்னர், கோவில் அருகே உள்ள சுனை நீரில் வைக்கப்பட்டிருந்த பழமையான சிலை மீட்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதற்கிடையே, பழமையான சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழமையான பாலதண்டாயுதபாணி சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

மீண்டும் பிரதிஷ்டை...

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் சக்கரவர்த்தி, கோவில் செயல் அலுவலர் ராதிகா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், அனுமதியின்றி நிறுவப்பட்ட புதிய ராஜ அலங்கார கற்சிலையை அகற்றிவிட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பழமையான மூலவர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். அகற்றப்பட்ட புதிய சிலை கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

மேலும், பாலதண்டாயுதபாணி கோவிலில் இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தி, பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கோவில் மண்டகப்படிதாரர்கள், நாட்டாமைகள், ஊர் முக்கியஸ்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com