

கோவை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவின் ஊழல் கறை படிந்த அமைச்சரை கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக முதல்-அமைச்சர் அனுப்பி வைத்திருப்பதால் இரண்டு விஷயங்கள் நடக்கும்; ஒன்று கடந்த முறை மாதிரியே என்.டி.ஏ பத்துக்கு பத்து தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறும். மற்றொன்று ஊழல் அமைச்சரை இங்கு அனுப்பியதன் மூலம் கோவை மாவட்ட மக்களை திமுக அவமரியாதை செய்திருக்கிறது.
கோவையில் பல ஆண்டுகளாக கட்சிக்கு உண்மையாக உழைத்த விசுவாசிகளுக்கு சீட் கொடுக்காமல் அவமரியாதை செய்துவிட்டு வேறு மாவட்டத்தைச் சார்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பதால் எங்களின் வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுலபமாக்கி விட்டார். இந்த முறையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் 2021 தேர்தலை போலவே 2026 தேர்தலிலும் கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.