திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம்!

திருமணத்துக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம்
Published on

திருப்பரங்குன்றம்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் கோவிலில், நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பாகும். இக்கோவிலில் திருமணம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகள் இங்கு திருமணம் செய்து வருகின்றனர்.

102 ஜோடிகள்

கடந்த 23-ந்தேதி நடைபெற்ற ஆவணி மாத முதல் வளர்பிறை முகூர்த்த நாளில் ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகூர்த்த நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், வருகிற 17-ந்தேதிக்கான திருமணத்துக்கு இதுவரை 52 ஜோடிகள் பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது.

20 நாட்களுக்கு முன்பே பதிவு

திருப்பரங்குன்றம் கோவிலில் முதல் திருமணம் செய்ய உள்ள ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.

கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் நடைபெறும். திருமண ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 20 பேருக்கு கருவறை தரிசனத்துக்கான அனுமதி டிக்கெட், திருமண பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஒரு ஜோடிக்கு ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நாளை 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்துள்ளதால், கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com