

தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக, வெறும் 2 மணி நேர இடைவெளியில் 102 மிமீ அதீத கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பரவலான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் இந்த பகுதிகளில் சுமார் 2 மணிநேர இடைவெளியில் 102 மிமீ அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த திடீர் மழையின் காரணமாக ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் காட்டாறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, நகரில் உள்ள சக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், காலை வேளையில் வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சத்தமின்றி வந்து தாக்கிய இந்த அதீத மழைக்கு, பசிபிக் பகுதியில் நிலவும் 'எல் நினோ' போன்ற உலகளாவிய வானிலை மாற்றங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என வானிலை ஆர்வலர்கள் தரப்பில் பேசப்படுகிறது.
பள்ளி வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆண்டிப்பட்டி பகுதி பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.