தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை
Published on

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்ட ஆய்வு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்றும், கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

102 கடைகளுக்கு அபராதம்

இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ஆய்வு செய்ததில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் கூறுகையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள் 1948-ன்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகை 5:3:2 என்ற விகிதத்தில், தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும், ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கு கீழ் வருமாறும் அமைக்க வேண்டும்.

பிற எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும். இதனை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய ஆய்வில் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் உடனடியாக பெயர் பலகை மாற்றாவிடில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் பெயர் பலகை குறித்து வர்த்தக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இருக்கை வசதி

அதேபோல, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் படி, பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத கடைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிகளை பின்பற்றாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் குறித்து தொழிலாளர் உதவி கமிஷனர்களிடம் (அமலாக்கம்) புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com