

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா உருவசிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இலக்கிய அணி செயலாளர் வைகைசெல்வன், துணை செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கொட்டும் மழையிலும் கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்றினர். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க... புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க...' என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் தொண்டர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடியே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்றனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் தோரணங்கள், கட்சி கொடி கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை கொட்டும் மழையிலும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
டெல்லியில்...
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.வினரும், அவரது ரசிகர்கள் மற்றும் விசுவாசிகளும் ஆங்காங்கே அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் மூலம் எம்.ஜி.ஆரின் திரைப்பட பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன.
எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு அ.தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி., செயலாளர் ஏ.விஜயகுமார் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சசிகலா
சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவசிலை மற்றும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படங்களுக்கு சசிகலா மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் எம்.ஜி.ஆர். இல்ல நிர்வாகி குமார் ராஜேந்திரன், அ.ம.மு.க. துணை செயலாளர் எஸ்.வைத்தியநாதன், சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு சசிகலா இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் டி.ராமலிங்கமும் மரியாதை செலுத்தினார்கள்.
டி.டி.வி.தினகரன்
விழுப்புரம் மாவட்டம் வானூர் பொம்மையார்பாளையத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
புதிய நீதிக்கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.