குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளை: 8 பேர் கைது

குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேரகன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக குமார்பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குமாரின் வீடு கோவில் பின்புறம் கீழமலையான்தெருவில் உள்ளது.
கடந்த ஜூன் 16-ந் தேதி குமார் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். கடந்த 13-ந் தேதி குலசேகரன்பட்டினத்திற்கு பிரியா வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 பவுன் நகை, வைரம், வெள்ளி நகை, விலையுயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மணப்பாடு பகுதியை சேர்ந்த பிரவின்குமார் மகன் மரியயோசுவான் (வயது 24), குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரத்தை சேர்ந்த கணேசன் மகன்கள் பட்டுதுரை (30), சின்ன மருது (19), குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவைச் சேர்ந்த முத்தையா மகன்கள் சின்னத்துரை (27), இசக்கிமுத்து (23), தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் மாரிமுத்து (42), குலசேகரன்பட்டினம் மறக்குடியைச் சேர்ந்த முத்தையா மகன் சண்முகசுந்தரம் (23), ஒரு பெண் ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, சின்னத்துரை ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதே சிறையில் மாரிமுத்துவும் இருந்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். சமீபத்தில் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
அப்போதுதான் அர்ச்சகர் குமார் இறந்துவிட்டார் என்பதும், அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர் என்பதும் சின்னத்துரைக்கு தெரியவந்தது. எனவே பூட்டிய வீட்டில் ஏராளமான நகை, பணம் இருக்கும் என நினைத்த சின்னத்துரை, அதனை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டுமென மாரிமுத்துவிடமும் கூறியுள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதில் பட்டுதுரை உள்பட மேலும் 5 பேரையும் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டனர்.
திட்டமிட்டபடி 7 பேரும் கடந்த 8-ந் தேதி குமார் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகைகளை திருடிவிட்டு தப்பிச் சென்றனர். ஆனாலும் அவர்களுக்கு திருப்தி இல்லாததால் கடந்த 10-ந் தேதியும் குமார் வீட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்தமாக 107 பவுன் தங்க நகைகள், வைரம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






