108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருகிறதா? - சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில்

108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருகிறதா? என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருகிறதா? - சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு முன்வருமா? என்று தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் (அரசு தலைமைக் கொறடா) கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தபோது, அரியலூரில் நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை நீதித்துறைக்கு நிலமாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலமாற்றம் செய்யப்பட்டவுடன் உரிய நிதி ஒதுக்கீடு பெற்று அங்கு நீதிபதிகள் குடியிருப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என்று கூறினார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், துணைக்கேள்வி ஒன்றை எழுப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு (திருவண்ணாமலை) அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித்தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கே.பி.அன்பழகன், அவர்களுக்கு நிரந்தர பணி வழங்கும் வாய்ப்பை உருவாக்குவதற்கான பரிசீலனையை அரசு மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஒட்டப்பிடாரம் ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், அங்கு 108 அவசர கால ஊர்தி வழங்கவும் அரசு முன்வருமா? என்று ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா(தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

மேலும், அங்கு ஏற்கனவே உள்ள 108 அவசர கால ஊர்தி ஒரு மணிநேரம் காலதாமதமாக வருவதாகவும், இதையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ஜப்பானில் அவசரகால ஊர்தியின் ஓட்ட நேரம் 13 நிமிடமாக இருக்கும் நிலையில், சென்னையில் 108 ஆம்புலன்ஸ் 8.2 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு சென்றுவிடுகிறது. எனவே காலதாமதத்துக்கு வாய்ப்பில்லை.

தற்போது ஓலா, உபர் டாக்சிகளுக்கு உள்ளதைப்போல, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இருக்கும் இடங்களை ஓரிடத்தில் இருந்து அறியும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அதன் செயல்பாடு மேம்படுத்தப்படும் எனக்கூறினார்.

ராதாபுரம் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை(அ.தி.மு.க.) வள்ளியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதோடு அங்கு விபத்து சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும், கூடங்குளத்துக்கு 108 ஆம்புலன்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஆய்வு செய்து நிறைவேற்றும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com