

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் முகம்மதுஅலி. இவருடைய மனைவி பாத்திமா (வயது 35). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்சில் ஏற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாத்திமாவிற்கு திடீரென்று பிரசவ வலி அதிகமானது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சு அவசரகால மருத்துவ உதவியாளர் பிரியா, முதலுதவி பயிற்சி பெற்ற டிரைவர் கார்த்திக் ஆகியோர் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். இதனால் பாத்திமாவிற்கு 108 ஆம்புலன்சிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்புலன்சில் வைத்து உரிய காலத்தில் சிகிச்சை அளித்து நலமுடன் ஆண் குழந்தை பெற உதவிய ஆம்புலன்சு பணியாளர்களை பாத்திமா குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்சு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பாராட்டினர்.