தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 10,840 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய கவர்னர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 10 ஆயிரத்து 840 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 10,840 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய கவர்னர்
Published on

பட்டமளிப்பு விழா

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்றார். விழாவிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் 302 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், 490 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 119 மாணவர்களுக்கு முதுகலை பட்டமும், 257 மாணவர்களுக்கு இளங்கல்வியியல் பட்டமும், 2 பேருக்கு இளங்கலை பட்டமும், 9670 மாணவர்களுக்கு தொலைநிலைக்கல்வி பட்டங்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்து 840 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா ஷேசய்யன் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தொன்மையானது

உலகின் பண்டைய தொன்மையான மொழிகளில் தமிழ்மொழியானது பல வகைகளிலும் முதல் இடம் வகிக்கிறது. நம்முடைய தமிழ்மொழிக்கு தமிழ் என்னும் பெயர் எப்போது சூட்டப்பட்டது என்பது தெரியவில்லை. தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னதாக இப்பெயர் தோன்றி இருக்க வேண்டும். எழுத்து தமிழுக்கும், பேச்சு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

எழுத்து தமிழின் வகைகளாக சங்கத்தமிழ், செந்தமிழ் ஆகியவற்றையும், பேச்சுத்தமிழின் வகைகளாக கொடுந்தமிழ், நவீன பேச்சு வழக்கையும் ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். எழுத்து வழக்குக்கும், பேச்சு வழக்குக்கும் இடையிலான வேறுபாடுகள் எந்த மொழியில் அதிகம் காணப்படுகிறதோ? அந்த மொழி தொன்மையானது என உணரலாம்.

மறந்து விடக்கூடாது

நம்முடைய மொழியின் தொன்மைகளையும், பெருமைகளையும் உணர்ந்திருக்கும் நாம், தமிழின் மரபையும், செழுமையையும் எவ்வாறு மேலும் வளப்படுத்தலாம் என்று சிந்தித்தல் அவசியம். இன்று பட்டம் பெறும் நீங்கள் மென்மேலும் உயர வேண்டும்.

வாழ்வில் எந்த நிலையில், எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தி இருப்பவர்களை மறந்து விடக்கூடாது. உங்களை செம்மைப்படுத்தியவர்களில் பெற்றோர், சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்களும் அடங்குவர். அவர்களை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராசு, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com