

சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான சூழலில், முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக 15 ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 15 ஆம் தேதி தேர்வு தொடங்கி 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு பொதுதேர்வு புதிய அட்டவணை
ஜூன் 15- மொழிப்பாடம்,
ஜூன் 17 -ஆங்கிலம்
ஜூன் 19- கணிதம்
ஜூன் 20 விருப்ப மொழி,
ஜூன் 22- அறிவியல்
ஜூன் 24 - சமூக அறிவியல்
ஜூன் 25 தொழில் கல்வி தேர்வுகள்