

திருவண்ணாமலை சின்னக்கல்லாபாடி பகுதியைச் சேர்ந்தவர் பொன்முடி. இவரது மகன் பிரபு (30 வயது), கடந்த 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்னர் மாணவியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து வெரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடத்தப்பட்ட சிறுமியை மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
அதன் மீதான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போச்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த பிரபுவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் பிரபுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.