

சென்னை,
நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில், 10ம் வகுப்புக்கான பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எனினும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் 10ம்வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர் என்றும் 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
இந்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த தகவலை உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.