

சென்னை,
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் எனக் கூறியும் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டுப் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒருமாத கால அவகாசம் வேண்டும் என்று 11 எம்.எல்.ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.