பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் பலி - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.

பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com