ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
Published on

ராமேசுவரம்,

தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் 11 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com