திருவண்ணாமலையில் 11 டன் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு

சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி பகுதியில் உள்ள 12 நுண் உர மையங்கள் மற்றும் 5 வள மீட்பு மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
கழிவுகள்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மறு சுழற்சி செய்ய முடியாத 11 டன் கழிவு பொருட்கள் சிமெண்டு தொழிற்சாலைக்கு எரி பொருளாக அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சி 39 வார்டுகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட போது இணைக்கப் பட்ட 18 ஊராட்சிகளை கொண்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் காலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி பகுதியில் உள்ள 12 நுண் உர மையங்கள் மற்றும் 5 வள மீட்பு மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

மறுசுழற்சி

இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரங்களாக தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகள் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சிமெண்டு தொழிற்சாலை

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் மாநகராட்சியில் மறுசுழற்சி செய்ய இயலாத 11 டன் உலர் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், பொதுமக்கள் வீட்டின் அருகில் வரும் குப்பை வண்டியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாநகராட்சி இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே தரம் பிரித்து ஈர கழிவுகளை உரமாக்க வேண்டும். மக்காத கழிவுகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com