அரிய வகை நோயால் அவதிப்படும் 11 வயது சிறுவன் - உதவிக்காக ஏங்கும் தாய்...!

கீரனூர் அருகே அரிய வகை நோயால் அவதிப்படும் சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்குமா? என அவனது தாய் பரிதவித்து ஏங்கி வருகிறார்.
அரிய வகை நோயால் அவதிப்படும் 11 வயது சிறுவன் - உதவிக்காக ஏங்கும் தாய்...!
Published on

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவுடையார்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த மகமாயி மகன் ஆவுடையப்பன் (வயது11). இவனுக்கு பிறந்ததில் இருந்தே பேஷியல் பிளெக்ஸிபார்ம் நியூரோபைப்ரோமா என்ற மரபணு சார்ந்த திசு வளர்சி நோய் இருந்துள்ளது. இதனால் அவன் வளர, வளர அவன் முகத்தில் நரம்பு தசை நாளங்களும் சதையும் வளர்ந்தபடியே வந்துள்ளது. இது தொடர்பாக ஒரு சில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லாமல் இருந்துள்ளது.

பள்ளிக்கு வராதே

தற்போது சிறுவன் ஆவுடையப்பன் முகத்தின் ஒரு பகுதி முழுவதும் சதை வளர்ந்து தொங்குவதால் அந்த சிறுவன் கடும் அவதி அடைந்து வருகின்றான். அவனது தாயாரும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளார்.

சிறுவன் ஆவுடையப்பன் 6-ம் வகுப்பு படிக்க வேண்டிய நிலையில் அவனது நிலை கண்டு ஆசிரியர்களும் அவனை பள்ளிக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டுள்ளான்.

தனக்கு ஏற்பட்ட அரிய நோயால் ஆவுடையப்பன், சக மாணவர்களோடு ஒன்றாக பள்ளிக்கு போக முடியாத சூழல், விளையாட முடியாத விரக்தி என வார்த்தைகளால் விவரிக்க முடியாத கடும் சோகத்ததில் ஆழ்ந்து ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறான். நோயினால் தனிமைப்படுத்தப்பட்டதை போல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

தாயின் ஏக்கம்

சிறுவனுக்கு ஏற்பட்ட நோயை கண்டு தந்தையும் அவனை புறக்கணித்து விட்டதான் கொடூரம். இதனால் தாய் மகமாயியுடன் தனது மாமா வீடான முருகேசன் வீட்டில் வசித்து வருகின்றான். கணவனின் துணையில்லாமல் மகமாயி கூலி வேலைக்கு சென்று தன்னையும், தனது மகனையும் கவனித்து வருகின்றார்.

வினோத நோயால் அவதிப்படும் சிறுவனின் நிலையை கண்டு அப்பகுதியில் உள்ள பலரும் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சை கொண்ட இந்த காலக்கட்டத்தில் சிறுவன் ஆவுடையப்பனுக்கு ஏற்பட்டுள்ள இந்நோயை குணப்படுத்த தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் உதவிட வேண்டும் என்பதே இந்த சிறுவனின் தாயின் கோரிக்கையாக உள்ளது. பெற்ற மகனின் நிலையைக்கண்டு தினமும் மனம் வாடி வரும் தாயின் ஏக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com