

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவிலில் வாள், கேடயத்துடன் போர்வீரர் காட்சியளிக்கும் பழமையான சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தும்பவனத்தம்மன் கோவிலில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு.அன்பழகன் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்தச் சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மு.அன்பழகன் கூறியதாவது:-
போரிலோ அல்லது தங்கள் சமூகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டங்களிலோ உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அமைக்கப்படுபவை வீரக்கற்கள் எனப்படும். அந்த வகையைச் சேர்ந்ததாக இந்தச் சிற்பம் விளங்குகிறது.
ஒழுங்கற்ற கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் 25.5 செ.மீ. உயரமும், 15 செ.மீ. அகலமும் கொண்டது. இதில் போர்வீரர் கம்பீரமான தோற்றத்துடன் இடதுபுறம் திரும்பி நிற்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவரது இடது கால் முன்னோக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், வலது காலின் முன்பகுதி தரையில் ஊன்றியும், பின்பகுதி ஊன்றாமலும் உள்ளது. இது அவர் முன்னோக்கி நகர்ந்து போரிடத் தயாராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
வீரரின் இடது கையில் வட்ட வடிவிலான கேடயம் உள்ளது. எதிரியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் கேடயத்தை உயர்த்திப் பிடித்துள்ளார். வலது கையில் உள்ள வாளையும் எதிரியைத் தாக்கும் வகையில் உயர்த்திப் பிடித்துள்ளார்.
தலையில் கிரீடம், காதுகளில் பெரிய காதணிகள், மார்பில் அணிகலன், தோள்களில் தோள்வளைகள் ஆகியவற்றுடன் வீரர் காட்சியளிக்கிறார். இடையில் பட்டாடை அணிந்துள்ளார். அதன் முடிச்சுத் தொங்கல்கள் இரு கால்களுக்கு இடையிலும், இடது காலின் முட்டிக்குக் கீழ்ப்பகுதி வரையிலும் காணப்படுகின்றன. இடையின் வலது பக்கத்தில் சிறிய குறுவாளும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சிற்பத்தில் கல்வெட்டு எழுத்துகள் எதுவும் காணப்படவில்லை. சிற்பத்தின் அமைப்பு மற்றும் உருவ அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று மு.அன்பழகன் தெரிவித்தார்.