11-ம் வகுப்பு மதிப்பெண் சேர்க்க தேவையில்லை என்பதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 11-ம் வகுப்பு மதிப்பெண் சேர்க்க தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
11-ம் வகுப்பு மதிப்பெண் சேர்க்க தேவையில்லை என்பதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

இது குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்து விடும். 11-ம் வகுப்பில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, மீதமுள்ள காலங்களில் 12-ம் வகுப்பு பாடங்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் நடத்தப்படும்.

பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடங்களுக்கும், நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுக்கும் 11-ம் வகுப்பு பாடம் தான் அடிப்படை. 11-ம் வகுப்பில் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாவிட்டால் உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுவிடும்.

11-ம் வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சற்று கடினமாக இருப்பது உண்மை தான். இதற்கு தீர்வு காண்பதை விடுத்து 11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com